ஒன்றில் மூன்று

 

புளிப்பு மாங்காய்கள்

புளிப்பு மாங்காய்கள்

மாங்காய் ஸீஸனில் வாங்கியுள்ள மாங்காயை மூன்று ரகமாகச்

செய்ததுதான் இது.

இனிப்புத் தொக்கு ஒன்று, காரம் சேர்த்த தொக்கு ஒன்று. மாங்காய்ப்

பச்சடி ஒன்று. ஆக மூன்று ரகம்.

மொத்தமாகத் துருவியதில் மாங்காய்த் துருவல் அதிகமாக இருந்தது.

மூன்றாகப் பிரித்ததில்  எல்லா வகையும் செய்ய முடிந்தது.

பச்சடி இன்னும் சுலபம். அடுத்து எழுதுகிறேன்

பார்ப்போமா உங்களுடன்.

காரமாங்காய் தொக்கு.

ரெடியாகும் காரத் தொக்கு

ரெடியாகும் காரத் தொக்கு

வேண்டியவைகள்.

துருவிய மாங்காய்—4கப். தோலைச் சீவி விட்டு மாங்காயைத் துருவவும்.

மிளகாய்ப்பொடி—-4 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்ப்பொடி—2 டீஸ்பூன்

நல்லெண்ணெய்–அரைகப்

ருசிக்கு– உப்பு

கடுகு—1 டீஸ்பூன்

வெந்தயம்—1 டீஸ்பூன்

பெருங்காயப்பொடி—1 டீஸ்பூன். விருப்பத்திற்கேற்ப சேர்க்கவும்.

செய்முறை–

கடுகையும்,வெந்தயத்தையும்,  சூடான வாணலியில் எண்ணெய்விடாது

வறுத்துப் பொடிக்கவும்.

செய்முறை

நான்ஸ்டிக் வாணலயிலோ, அல்லது  அலுமினியம் வாணலியிலோ பாதி

எண்ணெயைக் காயவைத்து துருவிய மாங்காயைப் போட்டு  வதக்கவும்.

புளிப்புக்குத் தக்கபடி உப்பு சேர்க்கவும். மஞ்சளும் சேர்த்து நிதான தீயில்

சுருள வதக்கவும்.

நீர் வற்றி   எண்ணெய் பிரிந்து வரும் போது,மிளகாய்ப்பொடி,மீதி

எண்ணெயைச்சேர்த்துக் கிளறி, இறக்கி வெந்தயகடுகுப் பொடியைச் சேர்த்துக்

கிளறவும்.

பெருங்காயப் பொடியைச் சேர்த்துக் கிளறி ஆறினவுடன் ருசி பார்த்து

உப்பு காரம் ருசி பார்த்து   சுத்தமான பாட்டலில் வைத்து மூடவும்.

பாட்டிலில் அடங்கத் தயார்

பாட்டிலில் அடங்கத் தயார்

ஃப்ரிஜ்ஜில் வைத்து  நாள்ப்படவும் உபயோகப் படுத்தலாம். அடுத்தது

இனிப்புத் தொக்கு

இனிப்புத் தொக்கு

இனி.ப்புத் தொக்கு.

வேண்டியவைகள்

மாங்காய்த் துருவல்—-2கப்

வெல்லம்—-2கப்

உப்பு—ஒரு டீஸ்பூனைவிட அதிகம்

எண்ணெய்—-3 டேபிள்ஸ்பூன்

வறுத்தரைத்த சீரகம்,வெந்தயம், வகைக்கு ஒருஸ்பூன் பொடித்துக் கொள்ளவும்.

மிளகாய்ப் பொடி—-2 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்ப்பொடி—சிறிது.

செய்முறை

நான் ஸ்டிக் வாணலியில்  எண்ணெயைக் காயவைத்து, மாங்காய்த் துருவலை

வதக்கவும். உப்பு , மஞ்சள் சேர்க்கவும்.

துருவல் வதங்கியதும், வெல்லத்தூளைச் சேர்த்துக் கிளறவும். வெல்லம் சேர்த்ததும்

சிறிது இளகும்.

நன்றாகக் கிளறிக்கொண்டே இருந்தால்  மாங்காய் சேர்ந்து வெந்து, சுருண்டு வரும்.

கையில் ஒட்டாத பதத்தில் இறக்கி,வெந்தய,சீரகப்பொடியைச் சேர்த்துக் கிளறவும்.

பெருங்காயப்பொடி,   அல்லது, சிறிது கரம் மஸாலாவும் சேர்த்துக் கிளறி

உபயோகிக்கலாம்.

தித்திப்பும்,காரமுமாக நானும் ரெடி

தித்திப்பும்,காரமுமாக நானும் ரெடி

இனிப்பு  விருப்பமானவர்களுக்கு  ரொட்டி,தோசை முதலானவற்றுடன் சேர்த்துச்

சாப்பிட நன்றாக இருக்கும்

. பச்சடியையும் எழுதிவிடுகிறேன்.

வேண்டியவைகள்

மாங்காய்த் துருவல்—அரைகப்

பச்சைமிளகாய்—3

வெல்லம்—-முக்கால்கப்,

துளி–உப்பு

எண்ணெய்—2 டீஸ்பூன்

கடுகு,பெருங்காயம்–சிறிது

வறுத்த வெந்தயப்பொடி,சீரகப்பொடி சிறிது.

நான்தான் பச்சடி

நான்தான் பச்சடி.

செய்முறை

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, கடுகை வெடிக்க விட்டுநறுக்கிய பச்சை

மிளகாயை வதக்கி  மாங்காய்த்   துருவலையும் சேர்த்து    வதக்கவும்.

துருவல் வதங்கியதும்  , அரைகப் தண்ணீர் சேர்த்து ,வெல்லமும் சேர்த்து

கொதிக்க விடவும். உப்பு,பெருங்காயம்,மஞ்சள் சேர்க்கவும்.

கொதித்துச் சற்றுக் குறுகி வரும்போது இறக்கி, வெந்தய,சீரகப்பொடியைச்

சேர்க்கவும்.

பச்சடி தயார். நீர்க்க இருந்தால் துளி மாவு கரைத்துச் சேர்த்து ஒரு கொதி விடவும்.

அவ்வளவுதான்.

மொத்தமாக கடுகு வெந்தயப் பொடிகள் இருந்தால்    ஊறுகாய் வகைகளுக்கு சீக்கிரமே

தயார் செய்ய உபயோகமாக இருக்கும்.

 

 

 

 

 

ஜூலை 13, 2014 at 12:04 பிப 8 பின்னூட்டங்கள்

மினுமினு முருங்கைக்கீரை அடை

(more…)

ஜூலை 9, 2014 at 2:52 பிப 16 பின்னூட்டங்கள்

லெட்டூஸ் ஸேலட்

லெட்டூஸ் ஸேலட்

இதைமிகவும் ஸுலபமாகத் தயாரிக்கலாம். அதிக ஸாமானுமில்லை. வெய்யில் காலத்திற்கேற்றது.

வேண்டியவைகள்.

வெங்காயம்—-ஒன்று

கேரட் –ஒன்று

தக்காளி —ஒன்று.

உருளைக்கிழங்கு —ஒன்று.

லெட்டூஸ் இலைகள்—நறுக்கியது. –1கப்.

உப்பு, ஒரு இதழ்—பூண்டு, உரிகானோ இருந்தால்—சிறிதளவு.

எலுமிச்சை சாறு சில துளிகள்.

அரை டீஸ்பூன்—ஆலிவ் ஆயில்.

செய்முறை.

உருளைக் கிழங்கை வேக வைத்து தோலுரித்துச் சிறிய துண்டங்களாகச்

செய்து கொள்ளவும்.

சுத்தம் செய்த கேரட்டைத் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

வெங்காயத்தையும் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

தக்காளியையும் துண்டுகளாக்கவும்.

பூண்டைத் தட்டி எண்ணெயில் கலக்கவும். உப்பு சிறிது,உரிகானோ,எலுமிச்சைச்

சாற்றைக் கலக்கவும். விரும்பினால் மிளகுப்பொடி துளி சேர்க்கலாம்.

ஒரு அகன்ற பாத்திரத்தில், லெட்டூஸ் இலைகளுடன்,உருளைக்கிழங்கு,வெங்காயம்,கேரட் துருவல்,

பூண்டு சேர்த்த எண்ணெய் இவைகளை ஒன்றாகக் கலக்கவும்.

தக்காளியால் அலங்கரித்து வைத்து, சேர்த்துச் சாப்பிட வைக்கலாம்.

முளைப் பயறுகள் இருந்தாலும் சேர்க்கலாம். ருசியானது. நல்லதும் கூட.

ஜூன் 19, 2014 at 8:32 முப 12 பின்னூட்டங்கள்

கமகமக்கும் மிதிபாகல் பிட்லை

 மிதிபாகல் (more…)

ஜூன் 4, 2014 at 11:39 முப 6 பின்னூட்டங்கள்

லெஸொதோLESOTHO அனுபவமும் தென் ஆப்பிரிக்காவும்

ஸன்ஸிடிமுகப்பு

ஜோஹான்ஸ்பர்க்கில் நாங்கள் தங்கி இருந்து அவ்விடமிருந்து முடிந்தவைகளைச் சுற்றிப்

பார்த்தோம். கூட வந்தவர்கள் நேபாலி குடும்பத்தினர்.

ஏர்போர்ட்டில் முன்பு ஜெனிவாவினின்றும் வரும்போது பார்த்தவைகள் ஞாபகத்திற்கு வந்தது.

மறுநாள் காலையில்தான் எங்களுக்கு லெஸொதோ போகமுடியும் ஏர்ப்போர்ட்டின் மேல் தளத்திலுள்ளவைகளைப்

பார்க்க, ஏதாவது சாப்பிட என்று போனோம்.

அவ்விடம் பார்த்த வகைவகையான கலர்களில் உள்ள வர்ணிக்க முடியாத வகையில்

கடைகளில் கொட்டிக்கிடக்கும் கற்களை வர்ணிக்க வார்த்தைகளில்லை.

ஆபரணத்திற்காக வேண்டி இக்கற்கள் மனதைக் கொள்ளை கொண்டன.அவை எல்லாமும்

ஞாபகத்திற்கு வந்தது.

மஸாஜ் செய்வதற்காக வாடிக்கையாளர்களை பலவிதத்தில் ஆகர்ஷிக்கும் பெண்களைப் பார்க்க முடிந்தது.

உலகத்து ஸாமான்கள் யாவையுமே   எது வேண்டுமானாலும் வாங்கலாம். அம்மாதிரி

பலவண்ணக் கடைகள். பிரமிப்பை உண்டு செய்தது.

ஆனால் நாம் இப்போது வேறு விதமான உலகைப் பார்க்கப் போகிறோம்.

ஜோஹான்ஸ் பர்க்கில்

காலையில் எழுந்து யாவரும் தயாரானோம். அவ்விடம் வீதிகளில் வாயு வேகமாகச் செல்லும்

கார்களைத்தான் பார்க்க முடிந்த்தே தவிர மனித நடமாட்டமே இல்லை.

அதிலும் பெண்களைப் பார்க்கவே முடியாது.

நாங்கள் தங்கி இருந்த ஹோட்டல்காரர்களே ஸரியான பந்தோபஸ்துடன், சுற்றுலாவிற்கும்

ஏற்பாடு செய்கிரார்கள்.

அப்படி இன்று   காட்டு மிருகங்கள்,அதன் இயற்கைச் சூழலில் பார்க்க என்று சொன்னார்கள்.

ஏதோ டிபனை முடித்துக் கொண்டு, கையில் வேண்டிய கொரிப்பதற்கும் எடுத்துக் கொண்டு

அவர்களின் வண்டியில் ஒரு பசுமையான இடத்தில் கொண்டு விட்டார்கள்.

பசுமையான இடம்

அங்கிருந்து அவ்விடத்திய பஸ்ஸில் போகக் காத்திருந்தோம்.

கூண்டு வண்டிமாதிரி பஸ் . வழிநெடுக  நல்ல பசுமையான இடங்கள். காடு மாதிரி இல்லை.

ஆனால் நாடும் இல்லை.

வரிக்குதிரைகள்

பாருங்கோ,பாருங்கோ, அப்புறம் பேசலாம். பிள்ளை எச்சரிக்கிறான். அதுவும் வேண்டும் நமக்கு.

வரிக்குதிரைகளைப் பார்க்க முடிகிறது. சிறிது நேரம் வரை வரிக்குதிரைகள்மயம்.

அப்பறம் ஒட்டைச்சிவிங்கிகள்.

ஒட்டைச் சிவிங்கிகள்

இது முடிந்ததும் ரெய்னோ. இவ்வளவு தானா !!!!!!!!!!

ரெய்னோ

இல்லே வெவ்வேரெ இடம் போகணும். ஒருரவுண்டு வந்து இறங்கினோம்.

அங்கிருந்து ஸன்ஸிடி போனோம்.

ஸன்ஸிடி முகப்பு

பூராநேரமும் சுற்றி சுற்றி, பல கேளிக்கை இடங்கள்,

மிஸ் வேர்ல்ட் நடந்த இடம், இன்னும் பொழுது போக்குகளுக்கான இடம் எல்லாம்

சுற்றிப்பார்த்து ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.

அதற்கும் அடுத்த நாள்.

இன்று லயன்ஸ் பார்க்     பார்க்கப் போகிறோம். பகல் பன்னிரண்டு மணிக்குத்தான் அவைகள் இறை சாப்பிடும் நேரம்.

வழக்கம்போல் காலை பத்துமணிக்குள் எல்லாம் முடித்துக் கொண்டு ஆர்வமாக சிங்கங்கள்

பார்க்க அதே முறையில் கூண்டு வண்டி,மற்றும் கார்கள் பின்தொடர பெரிய,அரிய காக்ஷிகளைக்

காணப்போகிறோம் என்ற எண்ணத்துடன் பயணிக்கிறோம்.

சிறுத்தைகள்

 

 

ஸவாரி

சிறுத்தைகள்காட்டெருமைகள், மான்கள் காட்சிகள்

காட்டெருமைகள்

 

 

சிங்கங்கள் இறை பிடித்துச் சாப்பிடும் காட்சியானால் பார்க்கக் கஷ்டமாக இருக்குமே.

பாட்டிக்கு பயமா? பேத்தியின் கேள்வி.

 

சிங்கங்கள்தயார்

அவர்கள் உலகம் அவர்களுக்கு. ஸரியாக பன்னிரண்டுமணி. அங்கே பாருங்கள்.

சிங்கங்கள் அணி வகுத்து ஏக்கமாக நிற்கிறது. பின்னோட்டமிடுகிறது

. உணவு போடும் ஜீப்.

உயர்ந்த இரும்புக் கூட்டுடன் வருகிறது. சிங்கங்கள் பின் தொடருகிறது.

உணவு ஜீப்புடன்

பார்வையாளர்கள் உஷாருடன பார்க்க, தொப்,தொப் என்ற சப்தத்துடன் இறைச்சி வேகமாக வீசப்பட

ஆங்காங்கே விழுகிறது.இறை

 

பொத்தென்ற சப்தத்திற்கு நாய்கள் எச்சில் இலைகளுக்கு முந்திக் கொண்டு ஓடுவதுபோல சிங்கக்

கூட்டம் ஜீப்பின் பின்னால் ஓடுகிறது. இறையைக் கவ்விக் ,கொண்டுஏகாந்தமாகப்புசிக்க, கூட்டாஞ்சோறு

சாப்பிடஎன்று வெகு ஸ்வாரஸ்யத்துடன் புசிக்கும் சிங்கங்களைப் பார்க்க முடிகிறது.

உணவு

 

லோடு காலியான பிறகும் இன்னும் ஏதாவது விழுமா என்ற நப்பாசையுடன் ஜீப்பின் பின்னால் நிற்கும்

ஆவலாதிகளையும் பார்க்க முடிந்த்து.

பசி வந்திடப் பத்தும் அவைகளுக்கும் பறந்து போகும் போலும்.!!!!!!!!!!!

மேலும் வெண் சிங்கங்கள், அவைகளின் ஆசுவாஸம்.

வெண்சிங்கம் Lesotho 2007-08 087

சும்மா ஒரு எஸ்கர்ஷன் மாதிரித் தோன்றுகிறதா?

எவ்வளவோ வருஷங்களுக்கு முன் பார்த்த விஷயம்.

 

 

 

 

குட்டிப் பாப்பா இன்னும் ஒரு சிறிய பிக்னிக்,

பாக்கி உள்ளது. பிறகு பார்க்கலாம்.

 

 

 

 

 

 

 

 

மே 14, 2014 at 7:33 முப 12 பின்னூட்டங்கள்

அன்னையர் தினம்–15

எவ்வளவு ஆசை ஆசையாக குழந்தையை வளர்த்தோம்.  அந்தக் குழந்தையின்

நலம் குறித்துக் கூட அவர்கள் கடிதம் எழுதவில்லை அம்மா மனக் கஷ்டப்பட்டாலும்

வார்த்தைகளில் சொல்லுவார். என்ன பிரமாதம் போ.  ஊரில எத்தனையோ குழந்தைகளிருக்கு.

அதுகளைக் கொஞ்சினால்ப் போகிறது. எங்கேயாவது நன்றாக இருந்தால்ப் போதுமானது

என்று அடிக்கடி சொல்லுவார்கள்.

அன்னையர் தினப்பதிவு ஆரம்பித்து அடுத்த வருடமும் வந்து விட்டது.

என்னுடைய   இயலாமையை  நினைத்துக் கொண்டேன்.

காலம் முழுவதும் ஏதோ போராட்டங்கள் இருந்தாலும், பொருட் படுத்தாது அதிலிருந்து

மீண்டுகொண்டே  காலம் கடத்தினது  பொதுஜன  உறவுகளும், பிரருக்கு உதவி செய்து

மகிழும் மனப்பான்மையும் இருந்ததால்தான்.

காலங்கள் ஓடிக்கொண்டு இருந்தது. மிகுதி  இருந்த  நிலத்தையும்  விற்று அடுத்த

பெண்ணிற்கும் கலியாணம் செய்து முடித்து   காலம் பறந்து கொண்டு  இருந்தது.

எவ்வளவோ விஷயங்கள்.

என்னுடைய பெண்ணை தன்னுடன்  இருக்க வேண்டும் என்று

சொல்லி அப்பா அழைத்துப் போனது. தனக்குப் பேரன் கையினால் அந்திமக்

கிரியைகள் செய்ய வேண்டுமென்று தான் நன்றாக இருக்கும்போதே உறுதி

மொழி வாங்கிக் கொண்டது போன்றவைகள் அந்த நாளைய பெற்றோர்களின்

ஆசைகள்.

கான்ஸர்.  இந்த வியாதி வந்தால் , குடும்பத்தின் செல்வ நிலைக்கும் ஏதே வியாதி

பிடித்து விடும் என்று சொல்வார்கள்.

அந்த  நோயினால் அப்பா  பீடிக்கப் பட்டார். ஆனால்  அவர் ஒரு மருந்தும் சாப்பிடவே

மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து ஒரு வலிமருந்து கூட சாப்பிடாமல் இருந்து தான்

அவருடைய வாழ்வை முடித்தார்.

அம்மாதிரி ஒரு மன உறுதி எப்படி வரும்?  ஆறு வருடங்கள் அம்மாவின் பணிவிடை

அங்கும் அந்த பொறுமையுடன் சிச்ரூஷை.

அந்தக் காலத்தில் மருந்துகளும் கிடையாது.

எங்களை எல்லாம் வரவேண்டாம். குழந்தைகளை அழைத்துக் கொண்டு சிரமமாக

இருக்கும் என்ற ஒரே பதில்

எவ்வளவு பரோபகாரியாக இருந்தால் கூட ஸமயத்தில் சில காரியங்கள்

மறக்கப் படுகின்றன.

அப்பாவிற்கு அந்தியகாலம். பெரிய அக்காமட்டில் உதவிக்கு.

இருப்பதில் அனுபவமுள்ள பெரியவர்கள்,பார்த்து விட்டு அதிக நாள் இருக்க மாட்டார்.

பெண்களுக்குச் சொல்லி விடு.  சின்ன பெண் நான், சென்னை பெண் இன்னொருத்தி.

ஆனால்  அம்மா  சொல்லவில்லை. அடுத்தத்   தெருவிலிருக்கும் , பங்காளி உறவினர்களிடம்

போய், நாளை மறுநாள் என்றோ ஒருநாள் அவருக்கு செய்ய வேண்டிய காரியத்தை

கௌரவமாக நீ செய்ய வேண்டுமப்பா என்று  வேண்டுகோள் விடுத்து வந்தார்.

அந்த வயதான ,படித்த,பக்திமானுக்கு எந்த விதக் குறைவும் ,தகன ஸமயத்தில்

ஏற்படக் கூடாது. அப்போதும் சிச்ரூஷ மனப்பான்மைதான்.

 

எனக்கு அப்பா உயிர் நீத்த பிறகு தந்தி கொடுத்தார்கள்.

வந்த தந்தி அம்மா போய்விட்டாளென்று. கொடுத்தவர்கள் தவறோ,

வாங்கினவர்கள் தவறோ?

இரண்டும்  கெட்டான்     மனப்பான்மையில்  இரண்டு       குழந்தைகளுடன் கல்கத்தாவினின்றும்

வருகிறேன். சென்னை பெண்ணிற்கு   அவர்கள் விவரம் சொல்லவில்லை.

சென்னயிலிறங்கி, விழுப்புரம் போய் வண்டி மாறி புதுவை வண்டியில்  ஊரில் இறங்குகிறேன்.

அதே கம்பார்ட்மென்டில்  ஏற உறவுகாரர்கள்.

வந்தயாடி அம்மா,  வா.  அப்பா நல்லபடி போய்ச் சேர்ந்தார். இறங்க வழி கொடுத்து ஏறும் போதே

ஸமாசாரம்.

அப்பாதானே?

ஆமாம்.ஆமா.

மனது  ஒரு நிலைக்கு வந்து , கூட வரும் குழந்தைகளைக் கவனிக்க வேண்டுமே?

ஸ்டேஷனில் வெளியில் வந்தால்  வெளியில் என் பெண். அவளுக்குத் தெரிந்ததை

அவள் சொன்னாள்.

அந்திய காலம் அப்பாவிற்கு எப்படி இருந்தது?

கடைசிவரை ஞாபகம் இருந்தது.   வித்தியாஸமாக மூச்சு வருவதுபோல தோன்றியதும் அம்மா சொல்கிராள்.  பூஜையில் கடைசியில் ஒரு ஸ்லோகம் சொல்வீர்களே அதைச் சொல்லுங்கள்.

ஸ்லோகத்தை ஆரம்ப வார்த்தை சொல்லிவிட்டு  நீ சொல் என்கிரார். அவித்யா மூலநாசாயா ஜென்ம கர்ம நிவர்த்தயே என்று தொடர்ந்து கொண்டே முடியும் வரிக்கு

ஞான வைராக்ய ஸித்யர்த்தம் சாம்பசிவ பாதோதகம் சிவம்.

ஸ்லோகத்தை  ஆரம்ப முதல் சொல்லி விட்டு

ஸத்குரு பாதோதகம் சுபம். சாம்பசிவ பாதோதகம் சிவம் வரை சொன்னவர்.   அவர் பாதத்திலே சுபமாகிவிட்டார்.

அம்மா அந்தக் கடைசி நேரத்தைச் சொல்லும்போது, எவ்வளவு முடியாத நேரத்திலும், பூஜை புனஸ்காரங்கள் எப்படி உதவுகிறது?

கூட இருந்து பார்த்தவர்கள் சொன்னார்கள்.  அந்த நேரத்தில் கூட அம்மா

தைரியமாக ஒரு   அந்தியகாலம்  என்ற  துக்க  நேரத்தைக்  கொண்டுவராமல்

ஒரு சிவ பூஜையை  அப்பாவிற்கு ஞாபகப்படுத்தி சொல்ல வைத்து,இருக்கவே இருக்கும் கங்கா ஜலத்தைக் கொடுத்து   ஒரு பூஜைநடக்கும் இடத்தைக் கொண்டு  வந்து விட்டார்.

இன்னும் எவ்வளவோ விஷயங்கள் எழுத வில்லை. யாருக்கு எந்ந நேரம் எது தேவையோ

அதைக் கொண்டுவருவதில் அம்மாவிற்கு அனுபவமாகி விட்டது.

இம்மாதிரி எல்லாம் அதிகம் படிக்காத ஒரு ஸோஷியல் ஸர்வீஸை ,தக்க ஸமயத்தில்

ஸந்தோஷத்திலும், தேவையான   ஸமயங்களிலும்  கொடுக்கும்     அம்மாவை, நினைக்க

நினைக்க ஏதோ எழுத நினைத்து ஏதோ எழுதுவது போல  நீண்டு கொண்டே போகிறது.

என்ன அம்மாமார்கள்  எல்லோருக்கும் மிகவும் முக்கியமானவர்கள். எங்கள் அம்மா

ஒரு விசேஷ ப்ரகிருதி.

எல்லோரின் ஸுகத்திலும் இன்பம் காண்பவர்.

குறைந்த பக்ஷம்  இதை எனக்குத்தெரிந்த வகையில் எழுதி வருகிறேன். இன்னும் சில

ஸம்பவங்களை அடுத்து எழுதுகிறேன். அன்னையர் தின நினைவுகள் இன்னும் உள்ளன.

தொடர்ந்து வருவேன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மே 6, 2014 at 9:08 முப 9 பின்னூட்டங்கள்

வாழ்த்துகள்.

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். சொல்லுகிறேன்.

தொடர்ந்து படிக்கவும் ஏப்ரல் 14, 2014 at 4:24 முப 8 பின்னூட்டங்கள்

Older Posts


பிரிவுகள்

  • Blogroll

  • Feeds


    Follow

    Get every new post delivered to your Inbox.

    Join 179 other followers